கொருக்குபேட்டையில் சுற்றித்திரிந்த ரவுடியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொருக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதியில் நேற்று மாலை ஒரு வாலிபர் சுற்றித்திரிந்தார். அப்போது, அங்கிருந்த 4 வாலிபர்கள், அவரை பிடித்து, ‘நீ யார், எதற்கு இங்கு சுற்றித்திரிகிறாய்,’ என்று கேட்டனர்.இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், அந்த வாலிபர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், ஆர்.கே நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், வெட்டுபட்ட வாலிபர் கொடுங்கையூரை சேர்ந்த சம்பத் (35) என்பது தெரியவந்தது. இவர் மீது அடிதடி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருப்பதும்,போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, அங்கிருந்து தலைமறைவாகி கொருக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதியில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த இவரை அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, அவரை வெட்டியதும் தெரிந்தது.தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.