பிறப்பு சான்றிதழ் வாங்க வந்தபோது கோவை அரசு ஆஸ்பத்திரியில் 8 மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்தவர் செல்வராணி (28). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக செல்வத்துக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர், வேலைதேடி கடந்த 10-ந் தேதி கோவை ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது கோவையில் வேலைக்கு செல்வதற்காக காத்திருந்த திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் (35) மற்றும் அவருடைய மனைவி பிரபாவதி (30) ஆகியோர் அறிமுகம் செல்வத்துக்கு கிடைத்தது. இவர்களுக்கு குழந்தை கிடையாது.
இந்த நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க நேற்று முன்தினம் செல்வம் தனது மனைவியுடன் குழந்தைகளை எடுத்துக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது உதவிக்காக விக்னேஷ்-பிரபாவதி தம்பதியும் உடன் வந்தனர். பின்னர் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததும், அங்குள்ள இருப்பிட மருத்துவ அதிகாரி அலுவலகம் அருகே அமர்ந்து இருந்தனர். பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக செல்வம் தனது ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுக்க சென்றார். அப்போது ஒரு குழந்தையை செல்வராணியும், மற்றொரு குழந்தையை பிரபாவதியும் வைத்திருந்தனர்.
குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் குழந்தைகளின் எடைஅளவு எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும். எனவே தான் வைத்திருக்கும் குழந்தையின் எடையைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறியவாறு பிரபாவதி மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர். பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தையுடன் சென்ற அவர்கள் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் மற்றும் செல்வராணி ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தை மற்றும் அவர்களை காணவில்லை. குழந்தையை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில் குழந்தையை கடத்தியது விக்னேஷ்-பிரபாவதி தம்பதி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். நேற்று அவர்கள் இருவரும் குழந்தையுடன் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பூர் சென்ற போலீசார் அங்கு குழந்தையுடன் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் பிரபாவதி ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் குழந்தையை மீட்டதுடன், அவர்களை கோவை அழைத்து வந்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.