சாலையோரத்தில் கிடந்த தோட்டாக்கள்: தொழிலதிபர் மகன் விஜய் என்பவரிடம் விசாரணை!


மதுரை ஜீவா நகர் பகுதியில் சாலையோரத்தில் பழைய டிவி, மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுடன் துப்பாக்கி தோட்டாக்கள் (குண்டுகள்) கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அத்தோட்டாக்களை அப்பகுதி சில்வர் பட்டறை உரிமையாளர் ஒருவர் கண்டுள்ளார். அவர் உடனே இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்து துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றி விசாரித்து வர்ய்கின்றனர்.


முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் துரை என்பவரின் மகன் விஜய் வீட்டு கதவு திறந்து இருந்தபோது, திருடர்கள் இருவர் புகுந்து டிவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்ததும், அவற்றில் தோட்டாக்கள்  இருப்பது கண்டு அவர்கள் ஜீவா நகர் பகுதியில் சாலையோரத்தில் வீசிவிட்டுச் சென்றதாகவும் போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.


இதற்கிடையில், தொழிலதிபர் துரை 2013-ல் இறந்த நிலையில், அவர் லைசென்ஸ் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை (ரிவால்வார்) திருப்பி ஒப்படைத்த நிலையில்,தோட்டாக்கள் மட்டும் எப்படி அவரது மகனிடம் இருந்ததா என்பது குறித்தும், விஜய் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் பற்றியும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.