கொளத்தூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை


கொளத்தூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை உடனிருந்த 2 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.


சென்னை கொளத்தூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது 23). இவருடைய உறவினர் அபி என்ற அபினேஷ்(24). இவர்கள் இருவரும் அதே பகுதியில் புறா கூண்டு தயார் செய்யும் வேலை செய்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் சரண்(24). நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இவர்கள் 3 பேரும் கொளத்தூர் சத்தியசாய் நகர் 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.





 

அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் கையில் கத்தி, அரிவாளுடன் இவர்களை வழிமறித்தனர். இதனால் பயந்துபோன 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால் அந்த கும்பல் 3 பேரையும் விடாமல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் 3 பேரும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே  அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.





இதுபற்றி தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி, வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின்பால் சுதாகர், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு ரமேஷ் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். அபினேஷ், சரண் இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.