கோவை இருகூர் தீபம் நகரில் நேற்று அதிகாலையில் ஒரு கொள்ளை கும்பல் திரிந்ததுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7 பேர் கொண்ட அக்கும்பலில் உள்ளவர்கள் டவுசர் மட்டும் அணிந்து இருந்ததுடன் உடல் முழுவதும் எண்ணெய் தடவியும், கைகளில் பயங்கர ஆயுதங்களுடனும் அங்குள்ள ஒரு பங்களா வீட்டை நோட்டமிட்டபடி சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளை கும்பல் நடமாட்டத்தை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது அவர்களது அனைவரின் உருவமும் பதிவாகி இருந்தது. இது குறித்து குடியிருப்பு மக்கள் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, அங்கு நடமாடிய கொள்ளையர்களுக்கு 25 வயதுக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. கொள்ளையில் ஈடுபடும்போது யாராவது பிடித்தால் எளிதில் தப்பித்துவிடலாம் என்பதற்காக அவர்கள் டவுசர் அணிந்து இருப்பதுடன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி உள்ளனர்.
எனவே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, அவர்கள் வேறு எங்கும் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு அக்கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.