மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி!


கொடைக்கானல் அருகே, மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கொடைக்கானல் அருகே பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் லட்சுமணன் (வயது 25). இவருக்கு அடுத்த மாதம்  திருமணம் நடத்துவதற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை லட்சுமணன் தனது தோட்டத்துக்கு சென்றுள்ளார்.




 

அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனால் அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத லட்சுமணன், சோலார் மின்வேலியை தொட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.