மதுரை, அக்.1
மதுரை மாநராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதை நான்கு மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த மண்டலங்களுக்குரிய பகுதியில் தேங்கும் குப்பைகள், மழைநீரை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், சாக்கடையை பராமரித்தல், கழிவுநீர் பொது இடங்களில் தேங்காமல் இருத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டோ, அல்லது ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டோ சுத்தம் செய்துவருகிறது.
நகர்ப்புறங்களிலும் முக்கிய சாலைகளிலும் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு சீர் செய்யும் பணியைச் செய்து வரும் மாநகராட்சி, பல பகுதிகளில் முக்கிய சாலைகள் அல்லாத பகுதிகளைத் தவிர்த்து குறுகலான சாலைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. இதனால் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி செய்யும் இடமாக மாறும் நிலை உருவாகி வருகிறது. பல்வேறு குறைகளை மாநகராட்சி விரைந்து நிவர்த்தி செய்து வந்தாலும் அனைத்து வார்டுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் ஒரே நேரத்தில் போய்ப் பார்க்கமுடியாது என்ற காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மாநகராட்சிக்குத் தெரிவிக்க மதுரை மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் எண் ஒன்றை அறிவித்து அது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த எண்ணிற்கு பொதுமக்கள் குறைகளை போட்டோ அல்லது வீடியோ மூலம் தெரிவித்தால் அதை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பார்த்துவிட்டு எந்த வார்டு என்று கேட்டு அந்த வார்டு பொறியாளருக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். பின்னர் அந்தப் பொறியாளர் மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதுரை மாநகராட்சித் தொடர்பு கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தியும் அனுப்புகிறார்கள்.
மதுரையில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதியில் மழைநீர் வடிந்து விட்டாலும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டு வண்டியூர் சி.எம். நகர்ப் பகுதியில் மழைநீர் தேங்கி சாலை முற்றிலும் சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில் சாலை போட்டுத்தரும்படி பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறினார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அவசர அவசரமாக இப்பகுதியில் எங்கிருந்தோ அள்ளி வந்த மண்ணைக் கொட்டி திடீர் சாலை அமைத்தார்கள். இந்தச் சாலை தரமானதா? இல்லையா என்பதைக் கூட மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிடவில்லை. சும்மா பேருக்கு வேலை செய்துவிட்டோம் என்ற நோக்கில் மண்சாலை அமைத்துக் கொடுத்துவிட்டார்கள்.
சிறு மழை பெய்தாலே இங்கு கொட்டப்பட்டிருக்கும் மண் குழைந்து சேறாக மாறி விடுகிறது. பழனி பஞ்சாமிர்தத்தை ரோட்டில் கொட்டி அதில் நடந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த சாலை முழுவதும் இருக்கிறது. 29வது வார்டுக்கு உட்பட்ட வண்டியூர் சி.எம். நகரில் அப்துல் கலாம் தெரு, வசந்தம் தெரு, தென்றல் தெரு, பொதிகை தெரு, ஜே.பி.நகர், குழந்தைசாமி நகர், தாழம்பூ தெரு என்று பல்வேறு தெருக்கள் உள்ளன. இதில் எந்த ஒரு தெருவிலும் ரோடு சரியாக பராமரிக்கப் படவில்லை. இந்தப் பகுதி பொதுக்கள் மண் சாலையில் மற்ற நேரங்களில் சென்று வந்து கொண்டிருந்தாலும் சிறு மழை பெய்தால் கூட இச்சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, ஏதோ காஷ்மீர் அல்லது ஐஸ்லேண்ட்டில் சறுக்கு விளையாட்டு விளையாடுவது போல் சறுக்கிக் கொண்டுதான் வீட்டைவிட்டு சென்று வருகிறார்கள்.
மதுரை வண்டியூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ரிங் ரோடு செல்லும் வழி நன்றாக இருந்தாலும் இந்த சி.எம். நகர் என்னும் பகுதிக்கு நுழையும் இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இந்தப்பகுதியில் சுமார் 500 வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குழந்தைகள் என்று கணக்கெடுத்துக் கொண்டாலும் சுமார் 1000 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்தித் தான் மெயின் சாலைக்கு வரவேண்டியுள்ளது. இந்தத் தகவலை இப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வாட்ஸ் ஆப் மூலம் மாநகராட்சி புகார் கொடுத்தும், அவர்கள் பொறியாளருக்கு இத்தகவலை அனுப்பி வைத்து விட்டார்கள். பொறியாளரோ இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு கொடுங்கள், மனு கொடுத்தால்தான் என்னால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறுகிறார். ஏற்கனவே சாலை அமைக்க பலமுறை மனு கொடுத்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரி வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால் பொறியாளர் ஏதோ நாங்கள் புதிதாக புகார் தெரிவிப்பதைப் போன்று மனு கொடுங்கள் என்று கூறுவது எவ்வகையில் நியாயம் என்று இப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாணவர்கள், பொதுமக்கள், வயதானோர் மீது கருணை கொண்டு மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் இப்பகுதியை திடீரென்று பார்வையிட வரவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை 29வது வார்டில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலை வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை இல்லை என்கிறார் பொறியாளர்