நீட் தேர்வை ரத்து செய்யவதே அரசின் கொள்கை!


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்க்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.


கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் செப்டம்பர் 13-ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்காக ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே நலத்திட்டப் பணிகளை அமைச்சர் செங்க்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


''ஈரோடு மாவட்டம் முழுவதும் நலத்திட்டப் பணிகளும் புனரமைப்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.10-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள்  27-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதில் எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிகளைப்போல் அல்ல, தனித் தேர்வர்களின் நிலை வேறு.


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கரோனாவின் தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்க முடியும்'' என்றார்.