புதியநீதி கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை

மதுரை, அக்.1
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சியோடு, ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதியநீதி கட்சி கூட்டணி வைத்திருந்தது. வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக, பாரதிய ஜனதா ஆதரவோடு புதியநீதி கட்சி நிறுவனர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். வாக்கு எண்ணிக்கையின் போது திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் மாறி மாறி முன்னணியில் வந்தனர். கடைசி நேரத்தில் திமுக வெற்றி பெற்றது. இதனால் ஏ.சி.சண்முகத்திற்கு அதிமுக உயர் மட்டத்திலும், பாரதிய ஜனதாவிலும் நன்மதிப்பைப் பெற்றுவிட்டார். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதால் புதிய நீதிகட்சி சார்பில் சில தொகுதிகள் அதிமுக ஆதரவில் விடப்படும் எனத் தெரிகிறது. இதையொட்டி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகள் புதியநீதி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய நீதி கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி ஒவ்வொரு வார்டுகளுக்கும் சென்று கட்சி உறுப்பினர் களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
மதுரை மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தலில் அதிமுக பெருமளவு வெற்றிபெற புதியநீதி கட்சி அயராது தேர்தல் பணியாற்றும் என்று பி.ராமமூர்த்தி தெரிவித்தார்.