மதுரை மாநகராட்சி தேர்தல் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை

மதுரை, அக்.1
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. மாநகராட்சியை அதிமுக கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இராஜன் செல்லப்பா மேயராக இருந்துள்ளார். அவர் எம்.எல்.ஏ. ஆன பிறகு திரவியம் மேயராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு மாநகராட்சி கமிசனர் தனி அதிகாரி பொறுப்பை ஏற்று வருகிறார். தற்போது நடைபெற இருக்கும் மாநகராட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியைக் கைப்பற்ற அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் இராஜன் செல்லப்பா ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தொண்டர்களைச் சந்தித்து யாரை கவுன்சிலர் வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறுவார்கள் என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு மேயர் பதவிக்கு  தனியாக நிறுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது விதிகள் மாற்றப்பட்டிருப்பதால் பழைய முறைப்படி கவுன்சிலர்கள் ஒன்றுகூடி மேயரைத் தேர்வு செய்யலாம். இதனால் கவுன்சிலர்கள் வேட்பாளர்களுக்குள் கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதிக்கு ஆரம்பத்தில் எம்.எஸ். பாண்டியன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இராஜன் செல்லப்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். தற்போது மாநகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் மேயர் பதவிக்கு எம்.எஸ். பாண்டியன் பெயரை அமைச்சர் செல்லூர் ராஜூ பரிந்துரை செய்யலாம் என்று கூறப்படுகிறது. 100 வார்டுகளில் 70 வார்டுகளில் அதிமுக வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் புறநகர் பகுதியிலும் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக என்பது வேறு, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக என்பது வேறு. எனவே அதிமுக மக்கள் மனதில் பெருமளவில் இடம்பெற வாய்ப்பில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவை மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். அதன்படி பாராளுமன்றத் தேர்தலில் திமுக நூற்றுக்கு நூறு வெற்றிபெற்றுள்ளது. நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. எனவே நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும் என்று திமுக வினர் தெரிவித்தனர். 
மதுரை மாநகராட்சியை திமுக உறுதியாகக் கைப்பற்றும். திமுக தொண்டர்களும் மாநகராட்சி தேர்தலை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களும் ஒவ்வொரு வார்டாக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.