அரசியல் கட்சியில் சேர்ந்தால் டாக்டர் பட்டம் கிடைக்கும் என இளைஞர்கள் நினைப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவனர் தின விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அரசியல் கட்சியில் சேர்ந்தால், டாக்டர் பட்டம் கிடைக்கும் என்று இன்றைய இளைய தலைமுறையினர் நினைப்பதாக தெரிவித்தார்.
இந்த எண்ண ஓட்டம் தவறு என்றும், மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால்தான் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். தமிழகத்திற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்றும் தன்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதையே தான் நான் அதிகம் விரும்புவதாகவும் டாக்டர் தமிழிசை தெரிவித்தார்.
இதையடுத்து திருப்பூர் அருகே வள்ளிபுரம் பகுதியிலுள்ள மகா பெரியசாமி திருக்கோயிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.