திருப்புவனம் டவுன் பஞ்சாயத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் வீட்டுமனை அங்கீகாரத்திற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்

திருப்புவனம், அக்.1
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் டவுன் பஞ்சாயத்து இருக்கிறது. தற்போது வீடு கட்டுவதற்கு காலி இடத்திற்கு அரசு அங்கீகாரம் பெறவேண்டும். அதன் பிறகு வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவலை அதிகாரிகள் தருகிறார்கள். அதனடிப்படையில் வீட்டு மனை அங்கீகாரத்திற்காக இடத்தைப் பொறுத்து அரசுக்கு பணம் செலுத்த வேண்டும். இதை பயன்படுத்திக் கொண்டு திருப்புவனம் டவுன் பஞ்சாயத்தில் பணியாற்றும் அதிகாரி மற்றும் பில் கலெக்டர் ஆகியோர் கூட்டு சேர்ந்து மக்களிடம் லஞ்சம் கேட்டு அடாவடித்தனம் செய்கிறார்களாம். புறம்போக்கு இடத்தை பட்டா இடம் என்றும், பட்டா இடத்தை புறம்போக்கு இடம் என்றும் கூறி சம்பந்தப்பட்டவர்களை பயமுறுத்தி லஞ்சம் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்களாம். லஞ்சப் பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் ப்ளான் அப்ரூவல் தரப்படுகிறது. லஞ்சப்பணம் தராதவர்களுக்கு மாதக் கணக்கில் அந்த பைல் கிடப்பில் போடப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
பட்டா இடத்தை வைத்திருக்கும் ஒருவரிடம் புறம்போக்கு இடம் என்று கூறி அவரை அலைய வைத்துவிட்டு லஞ்சத்தை வசூலிப்பதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் வீட்டுமனை அங்கீகாரத்திற்கு ரூ.30 ஆயிரமும், ப்ளான் அப்ரூவலுக்கு ரூ.30 ஆயிரமும் மொத்தம் ரூ. 60 ஆயிரம் வசூலிக்கப்பட்டதாம். தற்போது ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு ஆதரவாக சில கட்சிக்காரர்கள் புரோக்கராகச் செயல்பட்டு வருகிறார்கள். புரோக்கரிடம் சென்று ப்ளான் அப்ரூவல் வாங்கித்தரும்படி கேட்டால் அவர்களுக்கும் ஒரு விலை வைத்து ரூ. 1 லட்சத்திற்கு மேல் லஞ்சப் பணம் பெறுவதாகக் கூறப்படுகிறது. மக்களிடம் வசூலிக்கப்படும் பணம் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் வசதி பெற்றுவிட்டதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்வளவு பணமா கேட்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் என்ன செய்வது? இந்தத் தொகை முழுவதும் எங்களுக்கல்ல அமைச்சர், கலெக்டர் போன்றவர் களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என்று அதிகாரி கூறுகிறாராம். இதனால் திருப்புவனம் பகுதி மக்கள் விரக்தியில் உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிப்பதற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் முன்வர வேண்டும். திருப்புவனம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களைக் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.