மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை:உள்ளாட்சி தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர திட்டம்அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
சென்னை,

 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்தது. காலை 11 மணிக்கு கூடிய அமைச்சரவையின் கூட்டம், பகல் 12 மணிவரை நீடித்தது.

 

இந்தக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், நிதித்துறை முதன்மைச்செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.


 

தமிழகத்தில் முதலீடு செய்துள்ள 5 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கான ஒப்புதலை இந்த அமைச்சரவை வழங்கியது.

 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக நிலை உயர்த்துவதற்கான முடிவு குறித்தும் அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 


 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தக்கூடிய சூழ்நிலை எழுந்திருப்பதால், தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய முக்கிய பதவிகளை, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கச் செய்யலாமா? அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க (மறைமுக தேர்தல்) செய்யலாமா? என்பது பற்றியும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

இந்த விஷயத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. என்ற போதிலும் நேரடி தேர்தல் இல்லாமல் வார்டு உறுப்பினர்கள் மூலமாக மேயர், நகராட்சி தலைவர்கள் தேர்வு செய்ய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்பட்சத்தில், அதற்கு முன்னதாக மக்களை சென்றடையும் நலத்திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

 

கடந்த 7-ந்தேதியன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்துள்ள நிலையில் குறுகிய காலகட்டத்தில் திடீரென்று மீண்டும் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்திருப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.