மதுரை,
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் இருக்கின்றன. 100 வார்டுகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதற்கு ஏதுவாக மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெறுவது வழக்கம். மூன்று ஆண்டுகளாக மாநகராட்சி தேர்தல் நடைபெறாமல் மாநகராட்சிப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. பல்வேறு வேலைப்பளு காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் இருக்கையில் அமர்வதில்லை என்று புகார்கள் வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் அதிகாரிகள் செவ்வனே பணிகளைச் செய்வார்கள் என்று பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டதும் முத்துப் பிள்ளை மேயராக இருந்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வந்தார். அதன்பிறகு எத்தனையோ மேயர்கள் பொறுப்பிற்கு வந்துள்ளனர். கடந்த முறை மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜன் செல்லப்பா மேயராக பொறுப்பு வகித்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வந்தார். பின்னர் மேயர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். மதுரை மேயர் பொறுப்புக்கு துணை மேயராக இருந்த திரவியம் பொறுப்புக்கு வந்து பணிகளை ஆற்றினார். அவருக்குப் பின் மூன்றாண்டுகளாக மேயர் தேர்தல் நடைபெறவில்லை. தற்போது நடைபெற இருக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து புதிய மேயர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். மதுரை மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு அதிமுக & திமுக கடுமையாகத் தேர்தல் பணிகளைச் செய்து வருகிறது.
யாருக்கும் சிபாரிசு தராமல் உண்மையான தொண்டர்களுக்கு கவுன்சிலர் சீட்டு கொடுக்க இரண்டு கட்சிகளுமே முடிவு செய்திருக்கின்றன. மதுரை மாநகராட்சியை அதிமுக மீண்டும் கைப்பற்ற முன்னாள் மேயர் இராஜன் செல்லப்பா, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் தொண்டர்களுடன் கலந்து பேசி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டவுடன் வேட்பாளர் பட்டியலை வெளியிட அதிமுகவும் திமுகவும் தயாராக இருக்கின்றன.
புதிய மேயர் யார் என்பது கவுன்சிலர் வேட்பாளர் தேர்வு மூலம் தெரிந்துவிடும் என்று இரண்டு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.