நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுவையிலும் கன மழை பெய்துள்ளது. தொடர் மழையால் அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு ,திருக்குவளை, வலிவலம், கீழ்வேளூர் திட்டச்சேரி, திருமருகல், உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலிருந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை நீடிப்பதால் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
கடலூர்
கடலூரில் காலை முதல் கன மழை பெய்து வருவதால சாலைகளிலும் தாழ்வான இடங்களிலும், மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் அவதி அடைந்தனர்.
பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் காலை முதல் கன மழை கொட்டி வருகிறது. கனமழையால் தெருக்களிலும், சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். அங்குள்ள மழைநீர் கால்வாயிலும் ஆறுபோல் வெள்ளம் ஓடுகிறது.
முத்தியால்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, காமராஜ் நகர் உள்ளிட்ட நகர் பகுதியிலும் அரியாங்குப்பம், தவளகுப்பம், பூரணங்குப்பம், பாகூர், திருபுவனை உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சில தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளது.
திருவாரூர்
திருவாரூரில் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டிய நிலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மாணவ,மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர்.
தொடர் மழையால் தியாகராஜர் கோவில் கமலாலய குளம் வேகமாக நிரம்பி வருகிறது-
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி, நன்னிலம், சுற்றுவட்டாரப்பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலையில் தொடர்ந்து 3 மணி நேரமாக கன மழை கொட்டியதால், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், அலுவலகம் செல்வோரும் நனைந்தபடி சென்றனர்.
செங்கல்பட்டில் மட்டும் 13 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ள நிலையில், சிங்கபெருமாள் கோயில், திம்மாவரம், ஆத்தூர் பகுதியிலும் இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர்
கரூரில் காலை 7 மணி முதல் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் அவதிக்குள்ளாகினர். வேலாயுதம்பாளையம், புலியூர், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்