கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்துக்கான கொப்பரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாதீபத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை நடைபெறுவதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.
அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ந்து மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 5 அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரைக்கு கோபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.