12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 1-ந் தேதி தொடங்குகிறது


மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் 12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னையில் வரும் பிப்ரவரி 1-ந் தேதி தொடங்க இருப்பதாக நேரு யுவகேந்திரா சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் எம்.என்.நடராஜ் கூறியுள்ளார்.


இந்த பரிமாற்ற நிகழ்ச்சி குறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியது:


பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடைபெறும் இந்த பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, 15 முதல் 29 வயது வரைவுள்ள  200 பழங்குடி இளைஞர்கள் பங்கு பெற உள்ளனர். இதில் 58 பெண்கள் அடங்குவர். இதன் தொடக்க விழாவை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்க உள்ளார்.


பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு அந்த பழங்குடி இளைஞர்களை சென்னையில் உள்ள முக்கியத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷக்கடியிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, அப்படி பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான முதலுதவியை எவ்வாறு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த 7 நாட்களிலும் தமிழகத்தின் கலாச்சாரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை சத்தீஸ்கர் பழங்குடி இளைஞர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பழங்குடி மக்கள் பல்வேறு மொழி, கலாச்சார வாழ்க்கை முறை போன்றவற்றில் பின்தங்கியிருப்பதால் நாட்டின் அன்றாட நிகழ்வுகளை அறிய முடியாமலும் மற்ற மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சூழலில் படிக்காத, பள்ளிக் கல்வியை தொடர முடியாத, படித்து வேலையில்லாத இளைஞர்கள் மற்ற மக்களோடு வாழவும், அவர்களிடம் உள்ள பழக்கவழக்கங்களின் குறைகளை களையவும் இத்தகைய பரிமாற்ற முகாம் மாவட்டம், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 27 நாடுகளுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


ஒரே பாரதம் – உன்னத பாரதம் என்ற கருத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள 31 மாநிலங்களிலிருந்து குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் பாதிப்பு அதிகம் உள்ள ஜம்மு, காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் இத்தகைய முகாம்களில் பங்கேற்க வழிவகை செய்யப்படுவதாக நடராஜ் கூறினார்.