சென்னையில் உள்ள நீர்நிலைகளை காத்திட முதலமைச்சர் சீரிய நடவடிக்கை

சென்னையில் உள்ள ஆறுகள், கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுத்திட 2,371 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். 


சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவித்து முதலமைச்சர் பேசினார். அப்போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 34,871 நீர்நிலைகள், 2,182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.



3ஆம் நிலை சுத்திகரிப்பு நிலையங்களின் திறன், 60 மில்லியன் லிட்டராக உயரத்தப்பட உள்ளதன் மூலம், நாட்டிலேயே, 20 விழுக்காடு கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படும் ஒரே நகரமாக சென்னை திகழும் என்றார்.


சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியனவற்றில், கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுத்திட 2,371 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக, முதலமைச்சர் தெரிவித்தார்.


சுமார் 9 லட்சம் குறு, சிறு விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு சாகுபடி பருவத்தில், தேவைக்கு ஏற்ப கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.


வெளிநாடுகளில் தாம் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.


தமிழ்நாடு கேரள மாநிலங்களுக்கு இடையேயான தன்ணீர் பிரச்சனைக்காக கேரள முதலமைச்சரை சந்தித்ததை போன்று வருங்காலத்திலும் சந்திப்புகள் தொடரும் என்றார்.


தமிழ்நாட்டில் 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் "அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்" தொடங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். இல்லந்தோறும் இணையம் என்ற கொள்கையையின்படி, பாரத்நெட் திட்டம் 1,815 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.


தகுதி வாய்ந்த முதியோர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படும் என்றும், பேரறிஞர் அண்ணா கூறியபடி, 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று, அதிமுகவிற்கும், அதன் ஆட்சிக்கும் இடையூறு செய்பவர்களை கிள்ளி எறிவோம் என்றார்.


எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, அரசியல் உள்நோக்கத்துடன், உண்மைக்குப் புறம்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.