நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க அரசு திறந்த மனதுடன் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2020, ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரை ஒட்டி, நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
பிரதமர் தமது உரையின் நிறைவாக, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலை குறித்து கூட்டத் தொடரில் கவனம் செலுத்த வேண்டுமென்று பெரும்பாலான உறுப்பினர்கள் ஆலோசனை கூறியிருப்பதை வரவேற்றுள்ளார்.
“பெரும்பாலான உறுப்பினர்கள், நாட்டின் பொருளாதார சூழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். நான் இதை வரவேற்பதுடன், நீங்கள் அனைவரும் கூறியபடி, பொருளாதார விஷயங்கள் குறித்து நாம் விவாதிக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறினார்.
தற்போதைய உலகப் பொருளாதார சூழலிலிருந்து நாடு எப்படி ஆதாயம் பெறலாம் என்பது குறித்து, உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உலகளாவிய சூழலை இந்தியாவுக்கு சாதகமாக எப்படி மாற்றலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
“புத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், நாட்டின் பொருளாதாரத்திற்கு சரியான திசையை நாம் காட்டினால், அது நாட்டு நலனுக்கு சிறந்ததாக இருக்கும்” என்றார் அவர்.
உறுப்பினர்கள் எழுப்பிய மற்ற விஷயங்கள் குறித்து கூறிய பிரதமர், “நீங்கள் அனைவரும் எழுப்பிய மற்ற முக்கியமான விஷயங்களை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் திறந்த மனதுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
கூட்டத் தொடர், நாடாளுமன்றம் ஆகியவற்றின் திறனை அதிகரிப்பதில், அனைத்து உறுப்பினர்களும் பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மேலும் கேட்டுக் கொண்டார்.
கடந்த இரண்டு கூட்டத் தொடர் குறித்து குறிப்பிட்ட பிரதமர், “இது கூட்டத் தொடர் மற்றும் நாடாளுமன்றத்தின் வேலைத் திறன் குறித்தது. கடந்த இரண்டு கூட்டத் தொடர்களில் வேலைத் திறன் அதிகரித்ததையும், அதற்கு மக்கள் பேராதரவு அளித்ததையும் நாம் கண்டோம். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், சபைகளின் வேலைத் திறனை அதிகரிப்பது நமது கடமையாகும். நாம் திறந்த மனதுடன் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கும்போது தான் இது சாத்தியமாகும்,” என்றார்.
அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அத்துறையின் இணையமைச்சர்கள் அர்ஜுன் ராம் மெக்வால், வி.முரளிதரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.