குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
இந்தியத் தாயின் சிறப்புமிக்க புதல்வர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவச் சிலையை திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ‘எனக்கு ரத்தத்தை தாருங்கள், உங்களுக்கு நான் சுதந்திரம் தருகிறேன்’ என்ற சுபாஷ் சந்திரபோஸின் அறைகூவல், நாட்டின் விடுதலைக்காக போராடிய லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. நேதாஜி இன்னமும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தியர்களான நாம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மகத்தான நாகரிகத்தின் பாரம்பர்யத்தை பின்பற்றி வந்தவர்களாக இருக்கிறோம். வரலாறு முழுக்க ஏராளமான ஏற்ற இறக்கங்களை நாம் சந்தித்திருக்கிறோம்.
நவீன கால வரலாற்றில் முக்கியமான விஷயமாக இருப்பது, பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்ற விஷயம் தான்.
நம் தாய்நாட்டின் வளமையைப் பார்த்து, ஹூன்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை நம் நாட்டின் மீது கண் வைத்தார்கள். நம் சுதந்திரப் போராட்டம் பல்வேறு தத்துவங்கள், சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டதாக இருந்தது. அமைதி வழியிலான சத்தியாகிரகம் முதல், கட்டமைப்பு செய்த எதிர்ப்பு வரை என தனிப்பட்ட மற்றும் கூட்டு செயல்பாடுகளின் தொகுப்பாக அது இருந்துள்ளது.
போராட்டத்துக்கு இன்னும் வேகமும், அதிக அளவில் ஏற்பு நிலையும் தேவைப்பட்ட சமயத்தில் 1915ல் காந்திஜி இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு வழிகாட்டுதலையும், ஒட்டுமொத்த அடையாளத்தையும் அவர் அளித்தார்.
நமது சுதந்திரப் போராட்டத்தில் `அஹிம்சையை' வலிமையான ஆயுதமாக காந்திஜி மாற்றிக் காட்டியபோதிலும், பகத்சிங் போன்றவர்கள், பிரிட்டிஷாரை விரட்டும் அணுகுமுறையைப் பின்பற்றினர்.
சுதந்திரப் போராட்டத்தில் அழிக்க முடியாத தடம் பதித்த மற்றொரு தலைவர் நேதாஜி. தனது சிந்தனைகள், வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் பல லட்சக்கணக்கான நாட்டு மக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் அவர்.
சுபாஷ் சந்திர போஸ் அல்லது எல்லோராலும் அன்புடன் `நேதாஜி' என அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் மதிப்புமிக்க சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர். அவருடைய கம்பீரமான தோற்றம் அவரை இயல்பான தலைவராக ஆக்கியது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர் தலைவராக உருவெடுத்தார்.
சுபாஷ் சந்திரபோஸ் பண வசதி மிகுந்த மற்றும் பிரபலமான வங்காளி வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார்.
இளமைக் காலத்தில் சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவர். தனது தேசபக்தி உறுதிக்கு பெயர் பெற்றவராக இருந்தார்.
கொல்கத்தாவில் உள்ள பெருமை மிகுந்த பிரசிடென்சி கல்லூரியில் அவர் படித்தார். தேசாபிமான செயல்பாடுகளுக்காக 1916ல் அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். பிறகு ஸ்காட்டிஷ் தேவாலயங்கள் கல்லூரியில் பட்டம் பெற்று, லண்டன் சென்றார். அங்கு 1920ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருந்தபோதிலும், இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழ்நிலையில், மதிப்புமிக்க அந்தப் பணியை 1921ல் ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.
காந்திஜி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் நேதாஜி பங்கேற்றார். இளைஞர்களுக்கு கற்பிக்கும் நபராகவும், பத்திரிகையாளராகவும் இருந்த அவர், வங்கத்து தொண்டர்களின் கமாண்டன்ட் ஆகவும் ஆனார்.
தேசாபிமான செயல்களுக்காக, பல முறை அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேதாஜி தேர்வு செய்யப்பட்டார். அவர் உருவாக்கிய தேசிய திட்டக் குழு, விரிவான தொழில்மயமாக்கலுக்கான கொள்கையை வகுத்தது.
ஆரம்பத்தில் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை அவர் ஆதரித்தார் என்றாலும், இரு தலைவர்களுக்கு இடையில் மெல்ல மெல்ல விரிசல் ஏற்பட்டது. இந்தியாவுக்கு `எந்த சமரசமும் இல்லாத முழுமையான தன்னாட்சி' வேண்டும் என்று இளம் தலைமுறை தலைவர்களும் நேதாஜியும் விரும்பினர். ஆனால், `பிரிட்டிஷ் ஆட்சியின் கீழான டொமினியன் அந்தஸ்தில் இந்தியா இருக்க' மூத்த மற்றும் மிதவாத தலைவர்கள் ஒப்புக்கொள்வதாக இருந்தனர்.
நேதாஜியின் ஆயுதப்போராட்ட அணுகுமுறைக்கு காந்திஜி ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், அவரை மதித்தார். `தேசபக்தர்களில் சிறந்த தேசபக்தர்' என்று நேதாஜி பற்றி ஒரு முறை காந்திஜி கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் அடிப்படைவாத சக்திகளை ஒன்று சேர்க்கும் முயற்சியாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை நேதாஜி தொடங்கினார். ஆனால் 1940ல் மீண்டும் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்திய வரலாற்றில் அந்த முக்கியமான காலக்கட்டத்தில் அவர் சிறையில் இருக்க மறுப்பு தெரிவித்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கி வந்து, அவரை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சுபாஷ் சந்திர போஸ் முயற்சியால் உத்வேகம் பெற்ற, வெளிநாடுகளில் வாழ்ந்த இந்திய தேசியவாதிகள் ஆசாத் இந்தியா என்ற தற்காலிக இந்திய அரசை சிங்கப்பூரில் 1943ல் உருவாக்கினர். அதற்கு ஜப்பான் ஆதரவு அளித்தது. ஆசாத் இந்த் படைத் தலைவராக போஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1943 நவம்பர் 6 ஆம் தேதி பரந்த கிழக்காசிய நாடுகளின் டோக்கியோ மாநாட்டில், ஆசாத் இந்தியாவின் தற்காலிக அரசுக்கான இடமாக அந்தமான் நிகோபர் தீவுகள் மாற்றப்படும் என்று அறிவித்தார்.
உலகப் போரின்போது இந்தத் தீவுகள் 1943 மார்ச் 23ல் இருந்து ஜப்பானின் அரசுப் படைகளின் வசமிருந்தது.
மூவர்ணக் கொடியை 1943 டிசம்பர் 30 ஆம் தேதி போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஏற்றி வைத்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து முதலில் விடுதலை பெற்ற இந்திய பகுதி அந்தமான் நிகோபர் தீவுகள் என அறிவித்தார்.
ஆசாத் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக நேதாஜி இருந்தார். ஆசாத் இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
தற்போது இந்த மாநில மக்களுக்கும், இந்திய தேசிய ராணுவத்திற்கும் (INA) இடையேயான தொடர்புகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழகத்தில் சுபாஷ் சந்திரபோஸை பிரபலப்படுத்திய ஒருவர் உண்டு என்றால், அது முத்துராமலிங்கத் தேவர்தான்.
மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவரான அவர், நேதாஜியின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தார். பார்வர்டு பிளாக்கின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், இந்திய தேசிய ராணுவத்திற்கு பெருமளவு ஆதரவைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நேதாஜி என்ற தமிழ் வார இதழ் ஒன்றையும் அவர் தொடங்கினார்.
லஷ்மி சுவாமிநாதனும் (கேப்டன் லஷ்மி சாஹல் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்) அனைவரும் அறிந்தவர்தான். இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவு ஒன்றை தொடங்கிய அவர், கேப்டன் லஷ்மி சாஹல் என்று அழைக்கப்பட்டார் (அவரது கணவர் பிரேம்குமார் சாஹலும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்). மற்றொரு மலேசிய தமிழ்ப் பெண் ஜானகி ஆதிநாகப்பன், மலேசியாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக ஆர்வலருமான ராசம்மா பூபாலன் ஆகியோரும், ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்தனர். தமது 14-ஆவது வயதில் போஸ் பங்கேற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்ட ஜானகி, போஸின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தமது காதில் அணிந்திருந்த விலை உயர்ந்த காதணியை இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதி திரட்டுவதற்காக வழங்கினார்.
அந்தமான் நிகோபரில் போர்ட் பிளேரில் நேதாஜி தேசியக் கொடி ஏற்றிய 75வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட 150 அடி உயரமான கொடிமரத்தை நான் சமீபத்தில் பார்த்தேன்.
நமது நாகரிகத்தின் மீது நேதாஜி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நாட்டின் மாண்புகள் மற்றும் வரலாறு ஆகியவை தான் தேசத்தின் பெருமை மற்றும் கூட்டு தன்னம்பிக்கையின் அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் ஆன்மிக மற்றும் அறிவுஜீவியான தலைவராக இருந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார். அவருடைய பிறந்த நாளை ஒட்டி இன்று, அந்த இந்தியப் புதல்வருக்கு நான் பணிவுடன் மரியாதை செலுத்திக் கொள்கிறேன்.
அதேபோல பிரிட்டிஷ் அடக்குமுறைகளுகளுக்கு எதிராக தைரியத்துடன் போராடிய வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் இன்று நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன். வீர சாவர்க்கருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, தனிமை சிறையில் 10 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு மனிதாபிமானற்ற முறையிலான கொடுமைகளுக்கு அவர் ஆளானார்.
தேசிய நலனுக்காகவும், சுதந்திரப் போராட்டத்துக்காகவும் அவர் ஆற்றிய மதிப்பிட முடியாத பங்களிப்பை, துரதிருஷ்டவசமாக சிலர் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
நமது வரலாற்று பாடப் புத்தகங்களில், உரிய அங்கீகாரம் தரப்படாமல் உள்ள சர்தார் வல்லபாய் படேல், வீர சாவர்க்கர் போன்ற தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர்களுடைய தியாகங்களில் இருந்து நாம் உத்வேகம் பெற்று, வலிமையான, பங்கேற்புடன் கூடிய, முன்னேற்றகரமான, அமைதியான மற்றும் நல்லிணக்கமான தேசத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.
எனதருமை சகோதர, சகோதரிகளே,
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
இவ்வளவு காலத்தில் நிச்சயமாக அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் நிறைய செய்யப்பட வேண்டியுள்ளது. வறுமை, கல்வி அறிவின்மை, சமத்துவமின்மை, பலவீனமான ஆட்சி நிர்வாகம், மோசமான கட்டமைப்பு வசதிகள், கழிப்பறை வசதிகள் இல்லாமை போன்ற சமூகக் கொடுமைகள் இன்னும் நமக்கு உறுத்தலாக இருக்கின்றன.
பகிர்ந்து கொள்ளும் வகையில் மற்றும் பொதுவான பெருமைகளால் உந்தப்பட்டு, அனைவருக்கும் சம அளவிலான வாய்ப்புகள் உள்ள இந்தியாவை நாம் கட்டமைப்பு செய்ய வேண்டும். தனிப்பட்ட மற்றும் பொது நன்மைக்காக தனது உள்ளார்ந்த மற்றும் புதுமை சிந்தனை ஆற்றலை வெளிப்படுத்த, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான அதிகாரம் கிடைக்கப் பெற்றவர்களைக் கொண்ட இந்தியாவை உருவாக்குவோம்.
`புதிய இந்தியாவை' உருவாக்குவதில் நிகழ்கால சவால்களை வெற்றி கொள்ள வேண்டியுள்ள நிலையில், நேதாஜியின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தில் இருந்தும், அவருடைய தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசியவாத கண்ணோட்டத்தில் இருந்தும் நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்தியா முன்னேற்றகரமான மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகில் அதிக அளவில் இளைஞர்கள் இங்கே உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த இளைய சமுதாயம் தான் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது.
அபரிமிதமான இந்த இளைய சமுதாயத்தின் சிந்தனை ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்தி, தேசத்தை கட்டமைப்பதற்கு புதுமை முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
இளைஞர்களின் மிகவும் பிரபலமான அடையாளமாக நேதாஜி இருந்தார். சில தலைவர்கள் மட்டுமே, நேதாஜி அளவுக்கு இளைஞர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்திய இளைஞர்களுக்கு 21வது நூற்றாண்டில் அவர் வழிகாட்டும் விளக்காக இருப்பார்.
அவருடைய வாழ்க்கை, ஒழுக்கத்தில் இருந்த உறுதிப்பாடு, எடுத்துக் கொண்ட முயற்சியில் காட்டிய அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் மன உறுதி, எதிர்கொள்ளும் ஆற்றல், ஊழலற்ற சித்தாந்தம் ஆகியவற்றில் இருந்து தேசத்தின் இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அவர் சிறந்த சிந்தனையாளராகவும், அவற்றை செயல்படுத்துபவராகவும் திகழ்ந்தார்.
சில காலம் வரை அவருடைய வாழ்க்கை பற்றிய தகவல்கள் புதிராகவே இருந்தன. சமீபத்தில் நேதாஜி தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அரசு வெளியிட்டு, இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் வைத்துள்ளது.
உண்மையில் இது பாராட்டுக்குரிய விஷயம். பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய வாழ்க்கை பற்றி நிறைய கண்டறிந்து, இந்த மகத்தான தேசபக்தரின் வாழ்க்கை பற்றியும், பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க ஓய்வின்றி மேற்கொண்ட போராட்டம் பற்றியும், அர்த்தமுள்ள வெளியீடுகளைக் கொண்டு வர இது உதவியாக இருக்கும்.
நேதாஜியின் 122வது பிறந்த தினத்தை ஒட்டி, 2019ல் செங்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தையும் அரசு திறந்து வைத்துள்ளது.
அது போன்ற நினைவகங்களும், இந்தச் சிலை போன்ற அடையாளங்களும், இந்த தேசத்தின் நினைவில் நேதாஜியை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
இந்த மாபெரும் தேசபக்தரின் 123வது பிறந்த நாளில், மகத்தான ஆன்மாவுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்திக் கொள்கிறேன்.