தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதற்காக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 9.50 மணி அளவில் தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்தார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், அவரை சட்ட சபை கூட்ட அரங்கத்திற்கு அழைத்து வந்தனர்.
அதன்பிறகு, காலை 10.01 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த தொடங்கினார். முதலில், சில வார்த்தைகள் தமிழில் பேசினார். “அனைவருக்கும் காலை வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” என்றார். அதன் பிறகு அவர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு வழங்குமாறு தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் எழுந்து குரல் கொடுத்தனர்.
அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறுக்கிட்டு, “ஒரு நிமிடம் பொறுங்கள். 2 வருடங்களாக நான் உங்களை பார்க்கிறேன். நன்றாக பேசி வருகிறீர்கள். இது விவாதம் அல்ல. உங்களுக்கு பேச நிறைய வாய்ப்பு இருக்கிறது. விவாதத்திற்கான நேரத்தில் உங்களுடைய கருத்துகளை தெரிவியுங்கள்” என்றார்.
ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் கவர்னரின் பேச்சை புறக்கணித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.03 மணிக்கு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினரும், சுயேச்சை உறுப் பினர் டி.டி.வி.தினகரனும் வெளிநடப்பு செய்தனர்.
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். தமிமுன் அன்சாரி, தேசிய கொடியை காட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியே சென்ற பிறகு, காலை 10.04 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது வினியோக திட்டம், பிற மாநிலங்களும் தொடர்ந்து பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது. முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பொது வினியோக அமைப்பு நடைமுறைகளினால், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தமிழ்நாடு அரசால் நடைமுறைப் படுத்த முடிகிறது.