1.45 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்


குறிப்பாகக் கிடைத்தத் தகவல் அடிப்படையில் கொழும்பிலிருந்து யூஎல் 125 விமானம் மூலம் செவ்வாயன்று சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த உமர் ஃபரூக் அலி (56), வெளியேறும் வழியில் இடைமறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  அவர், ஆசனவாயில் 2 பொட்டலங்களில் மறைத்து வைத்திருந்த தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.11.37 லட்சம் மதிப்புள்ள 270 கிராம் தங்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.


     துபாயிலிருந்து இரண்டு வெவ்வேறு விமானங்களில் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூருல் அமீன் (48), சென்னையைச் சேர்ந்த சையத் முகமது (51) ஆகியோர் வெளியேறும் வழியில் இடைமறித்து சோதிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 6 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 536 கிராம் தங்கமும், 98 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வில்லைகளும் என மொத்தம் 634 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் மதிப்பு ரூ.26.69 லட்சம் ஆகும்.


     கோலாலம்பூரிலிருந்து பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த அப்பாஸ் (34), என்பவர் வெளியேறும் வழியில் இடைமறைத்து சோதிக்கப்பட்டார். டிராலியின் கைப்பிடிக் குழாயில் மறைத்து வைத்திருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள 547 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


     இந்த மூன்று சோதனைகளிலும் ரூ.61 லட்சம் மதிப்புள்ள 1.45 கிலோ தங்கம் சுங்கச்சட்டம் 1962-ன்படி, பறிமுதல் செய்யப்பட்டது.


இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.