டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு காவலர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வந்த போராட்டத்தில் நேற்றைய தினம் திடீரென பெரும் மோதல் ஏற்பட்டது. சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலை தொடர்ந்து, இருபிரிவினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி, கற்களை வீசி தாக்கிக்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு சில கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியே பெரும் போர்க்களமாக மாறியது.
இதையடுத்து அங்கு போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களைத் துரத்தி அடித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தரப்பில், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இது "மிகவும் வருத்தமளிக்கும் செய்தி" என்று தெரிவித்துள்ளார். மேலும், "சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், அமைதியும் நல்லிணக்கமும் பேணப்படுவதை உறுதிப்படுத்தவும்" டெல்லி காவல்துறையினர் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதைத் தெரியப்படுத்தவும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, வன்முறை காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.