சென்னை விமான நிலையத்தில் 2.95 கி.கி 24 கேரட் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்!


சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் தொடர்பாக திங்களன்று நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. துபாயிலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் காமருதினை(33) வெளியேறும் வழியில் இடைமறித்து சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்கப்பசையை ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  332 கிராம் எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.14.33 லட்சமாகும். இந்தத் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, ஏற்கனவே அந்த நபருக்கு எதிராக குற்றவழக்கு இருந்ததால், கைது செய்யப்பட்டார்.


       துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஷாருகான்(21), முகமது ஜின்னா(30), அன்சாரி(46) ஆகியோர் வெளியேறும் வழியில் இடைமறித்து சோதனை செய்யப்பட்டனர். இவர்கள் மொத்தம் ஆறு பொட்டலங்களில் தங்கப்பசையை ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தனர். 564 கிராம் எடையும், ரூ.24.34 லட்சம் மதிப்பும் கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 


       முன்னதாக, ஞாயிறு அன்றிரவு ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொழும்பிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுல்தான் ஷாகுல் ஹமீத்(24), முகமது சதாம் உசைன்(29), ஷாகுல் ஹமீத்(63), சிவகங்கையைச் சேர்ந்த பஷீர் அகமது(35), இலங்கையைச் சேர்ந்த ரத்னஸ்ரீ(35) ஆகியோரை வெளியேறும் வழியில் பரிசோதனை செய்த போது, மொத்தம் 18 பொட்டலங்களில் தங்கப்பசையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  2.059 கிலோகிராம் எடையும், ரூ.88.88 லட்சம் மதிப்பும் கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


     மொத்தம் 9 வழக்குகளில் ரூ.1.27 கோடி மதிப்புள்ள 2.95 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் 1962 ஆம் ஆண்டு சுங்கச்சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..