மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, 2019 (நிலை -1) எழுதுவதற்கு தென் மண்டலத்தில் 2,81,958 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணினி வழியிலான இத்தேர்வு 03.03.2020, 04.03.2020, 05.03.2020, 06.03.2020 மற்றும் 09.03.2020 ஆகிய தேதிகளில் தினந்தோறும் 3 ஷிப்டுகள் வீதம், தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி & வேலூர் மற்றும் புதுச்சேரியிலும், ஆந்திரப்பிரதேசத்தில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், கர்னூல், விஜயவாடா, விசாகப்பட்டினம், வைசியநகரம், ராஜமுந்திரி, காக்கிநாடா, சிராலா ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர் & வாரங்கல் ஆகிய 21 நகரங்களில் உள்ள 44 மையங்களில் நடைபெற உள்ளது.
இத் தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை (e-Admission Certificate), தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பிருந்து, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு அனுமதிச் சீட்டு மற்றும் செல்லத்தக்க அசல் அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், கைக்கடிகாரங்கள், துண்டுச்சீட்டுகள், புத்தகங்கள் மற்றும் செல்போன், ஹெட்போன், கால்குளேட்டர், பேனா கேமராக்கள் போன்ற மின்னணு சாதனங்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவற்றை வைத்திருப்போரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு,, சட்ட ரீதியான / குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், வருங்காலத்தில் 3 முதல் 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களையோ அல்லது பைகளையோ தேர்வுக் கூடத்திற்குள் எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் திரு.கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.