சாக் ஷம் 2020 என்ற பெயரில், எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்த ஒரு மாத கால மாபெரும் விழிப்புணர்வு இயக்கம், தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு அதன் நிறைவு விழா சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நடைபெற்றது.
தமிழக அரசின் தொழில் வழிகாட்டுதல் & ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண்மை இயக்குனர் & தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் நீரஜ் மிட்டல் இ.ஆ.ப. விழாவில் கலந்து கொண்டு சாக் ஷம்
2020-ன் போது நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு & புதுச்சேரிக்கான செயல் இயக்குனர் பி.ஜெயதேவன், இந்திய எரிவாயு ஆணையத்தின் மண்டல தலைமை பொது மேலாளர் எம்.கே.பிஸ்வாஸ், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மண்டல எல்பிஜி மேலாளர் (தெற்கு) எஸ்.தனபால், பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தென் மண்டல இயக்குனரும், தலைமை மண்டல ஒருங்கிணைப்பாளருமான எஸ்.பி.செல்வம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய டாக்டர் நீரஜ் மிட்டல், எரிபொருள் பாதுகாப்பில் இளைய தலைமுறையினரின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார். சிறப்பான எதிர்காலத்திற்கு எரிபொருள்களை எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்பதில் குழந்தைகள் மிகத் தெளிவாக உள்ளனர் என்றார். வருங்கால தலைமுறையினரும் இதே உணர்வை பின்பற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். கண் பார்வை குறைபாடு உடைய குழந்தைகளும் பிரெய்லி வடிவில் தங்களது சிந்தனைகளை கலை வடிவில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். அவர்களது முயற்சிகளை பாராட்டுவதோடு மட்டுமின்றி, நமது செயல்பாடுகள் குறித்தும் சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முயற்சிகளுக்கும் பாராட்டுத் தெரிவித்த நீரஜ் மிட்டல், சிறப்புத் திறன் மிக்க குழந்தைகள் உட்பட இளைஞர்களின் தீவிர பங்களிப்பு வியப்பளிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறினார். பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை புறக்கணித்து விடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு தீர்வு காண இளைஞர்கள் ஆண்டுதோறும் 1 மரக்கன்றை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மெட்ரோ ரயில் பயணம் உள்ளிட்ட பொது போக்குவரத்துப் பயன்பாடுகளை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
வரவேற்புரையாற்றிய இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் பி.ஜெயதேவன், எரிசக்தி பாதுகாப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது என்றார். எதிர்கால தலைமுறையினரையும் கருத்தில் கொண்டு எரிசக்தியை நியாயமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். தனிநபர்கள் இதனை பின்பற்றுவதன் மூலம் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெரிய அளவில் உதவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். எரிபொருள் பாதுகாப்பு மற்றும் பூமியை பாதுகாப்பதில் வளரும் தலைமுறையினர் தங்களது பங்களிப்பு குறித்து நன்றாக அறிந்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
போட்டிகளில் பரிசுபெற்ற ஓவியங்கள் விழா வளாகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.