முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மாசி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, ஆவணி திருவிழா உள்ளிட்ட திருவிழா நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், இலவச தரிசன வரிசை உள்ளது. மேலும் ரூ.20, ரூ.100, ரூ.250 ஆகிய கட்டண தரிசன வரிசைகளும் தனித்தனியாக உள்ளன.
ரூ.100, ரூ.250 கட்டண தரிசன வரிசைகளில் செல்லும் பக்தர்கள், கோவில் மகா மண்டபத்தில் இருந்து ஒன்றாக சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து ரூ.250 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு லட்டு மற்றும் இலை விபூதி பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அம்ரித் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.250 கட்டண தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மற்றும் இலை விபூதி அடங்கிய பிரசாத பை வழங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி அளித்து உள்ளார். இதுகுறித்து கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தனிடம் ஆலோசித்து, விரைவில் நல்ல நாளில் இந்த திட்டம் தொடங்கப்படும்.