மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா


 


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா  வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 


பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா ஜனவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.


தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக கோயிலில் இருந்து சுவாமி அம்மன் காலை புறப்பாடாகி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு தீபாரதனை பூஜைகளுக்குப் பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பக்குளத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர்.