72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதலமைச்சர் துவக்கி வைத்தார்!


மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.


அவருடைய 72 ஆண்டுகளை நினைவு கூரும் வகையில் தமிழகத்தில் 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.


மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு இன்று 72-வது பிறந்தநாள். இதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


ஜெயலலிதாவின் பிறந்தநாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தையொட்டி பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய சிறுமி ச. பவதாரணிக்கு பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000/- வைப்பீட்டு தொகைக்கான பத்திரங்களையும், இத்திட்டத்தில் இணைந்து தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலைகளையும் தலைமைச் செயலகத்தில் நடந்த விழவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


தமிழ்நாடு முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பொருட்டு, மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை, தலைமைச் செயலகம் எதிரில் மகிழம் மரக்கன்றினை நட்டு, திட்டத்தினை துவக்கி வைத்தார்.


இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்.


இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும். இந்த மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளால் இணைத்து செயல்படுத்தப்படும்.


இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி. சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.