ஜெயலலிதா 72 - வது பிறந்த நாள் : அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்  தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருஉருவசிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.


 அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் அரும்பணியாற்றிய ஜெயலலிதாவின் 72 -வது பிறந்த நாள்  தமிழகம் முழுவதும் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகின்றனர்.  அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் 72 - வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.  ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கண் தானம், ரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள்  நலத் திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.