அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்பும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் மூத்த எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அதிபர் டிரம்ப் இந்தியா வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்த பயனும் இருக்காது.
அமெரிக்காவுடன் சில ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உள்ளன. எனினும், அவை அந்நாட்டை வலுப்படுத்தும் நோக்கிலேயே அமையும். அவர்களிடம் இருந்து நாம் வாங்கும் பாதுகாப்பு சார்ந்த தளவாடங்கள் அனைத்திற்கும் விலையாக நமது பணம் செலவிடப்படும். அவர்கள் இலவச பொருட்கள் என எதனையும் கொடுக்க போவதில்லை என்று கூறினார்.