வாரணாசியில் நடைபெற்ற ‘காசி ஒன்று பொருள்கள் பல’ என்ற நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்


பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களை, கலைஞர்களை, குறு, சிறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவது 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு உதவும் என்று  பிரதமர் கூறினார்.


5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கான முடிவுகள் எடுப்பதை அரசு தொடரும் என்று பிரதமர்  நரேந்திர மோடி  தெரிவித்தார். வாரணாசியில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களை, கலைஞர்களை, குறு, சிறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதும், வரவேற்பதும், இந்த இலக்கை எட்ட உதவும் என்றார்.


 


வாரணாசியில் உள்ள படாலால்பூர், தீன்தயாள் உபாத்யாயா வர்த்தக உதவி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘காசி ஒன்று பொருள்கள் பல’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்றார். காசி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இதர மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் கைவினைக் கலைஞர்கள் தயாரித்த பல்வேறு பொருட்கள் இடம்பெற்ற கண்காட்சியை இந்த நிகழ்ச்சியின்போது அவர் பார்வையிட்டார். ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற அடிப்படையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கைத்தறி, இளஞ்சிவப்பு மீனாகரி, மர பொம்மைகள், சந்தாலி கருப்பு அரிசி, கன்னாஜின் வாசனை திரவியம், மொராதாபாதில் உலோக அலங்காரப் பொருட்கள், ஆக்ராவின் தோல் ஷூக்கள், லக்னோவின் சிக்கான்கரி, ஆசம்கடின் கருமண் பானை ஆகியவை இடம்பெற்றிருந்த அரங்குகளை அவர் பார்வையிட்டதோடு, கைவினைக் கலைஞர்களோடும் உரையாடினார். பலவகையான பொருட்களைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களுக்கு உபகரணங்கள் அடங்கிய பைகளையும், நிதி உதவியையும் அவர் வழங்கினார்.


சர்வதேச சந்தையில், இந்தியப் பொருட்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க மேற்கொள்ளப்படும் பல முயற்சிகளுக்காகவும், நெசவாளர்கள், கைவினைக்கலைஞர்களுக்குப் பல்வேறு திட்டங்கள் மூலம் கருவிகள், கடன்கள் போன்ற அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்காகவும் உத்தரப்பிரதேச அரசை அவர் பாராட்டினார். ஒரு மாவட்டம், ஒரு பொருள் என்பது போன்ற உத்தரப்பிரதேச அரசின் திட்டங்கள் காரணமாக கடந்த இரண்டாண்டுகளில், உத்தரப்பிரதேசத்திலிருந்து பொருட்கள் ஏற்றுமதி சீராக அதிகரித்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு செல்வதாலும், இணையதளம் மூலம், உலக சந்தையைப் பெறுவதாலும், நாட்டிற்குப் பலன் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.


இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பட்டு, வாசனைப் பொருட்கள் போன்ற பலவகையான, தனித்துவம் மிக்க பொருட்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி, ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்பது போன்ற சிந்தனைகளின் பின்னணியில் இது மிகப்பெரிய உந்துதலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


கடந்த இரண்டாண்டுகளில் 30 மாவட்டங்களைச் சேர்ந்த 3,500க்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்கள் உத்தரப்பிரதேச வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். உபகரணப் பைகள் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கும்  கைவினைக் கலைஞர்கள் போன்றோருக்கும் உதவி செய்யும் உத்தரப்பிரதேச வடிவமைப்பு நிறுவனத்தின் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.


21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், நமது பாரம்பரியத் தொழில்களுக்கு நிறுவன ஆதரவும், நிதி உதவியும், புதிய தொழில்நுட்பமும், சந்தை வசதியும் அளிப்பது அவசியம் என்றார். கடந்த ஐந்தாண்டுகளில் இந்த திசையில் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறையுடன் நாம் முன்னேறி வருகிறோம்.


தொழில் துறைக்கும் சொத்து உருவாக்குவோருக்கும் உதவிட மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல நடவடிக்கைகளை விவரித்த பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட், பொருள் உற்பத்திக்கும் எளிதாக வணிகம் செய்வதற்கும் உயர் முக்கியத்துவம் அளித்துள்ளது என்றார். ரூ.1,500 கோடி ஒதுக்கீட்டுடன் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்புத் தளவாட பாதை அமைக்க ரூ.3,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதன் மூலம், சிறு தொழில்கள் பயனடையும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.


சிறுதொழில் நிறுவனங்கள், அரசுக்குப் பொருட்கள் விற்பனை செய்வதை, அரசு இ-சந்தை எளிதாக்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த கொள்முதல் முறை உருவாக்கப்பட்டிருப்பது சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து ஒற்றைச் சாளர முறையில் பொருட்களையும், சேவைகளையும் அரசு பெறுவதற்கு வகை செய்யும் என்று அவர் கூறினார்.


நாட்டில் முதன்முறையாக தேசிய பொருள் போக்குவரத்து கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இது இணையம் வழியாக ஒற்றைச் சாளர முறையில்  பொருள் போக்குவரத்து முறையை உருவாக்கும் என்றும் இதனால் சிறுதொழில் நிறுவனங்கள் போட்டியை எதிர்கொள்ள முடியும் என்றும் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் என்றும் தெரிவித்தார்.


பொருள் உற்பத்திக்கான ஆற்றிலின் இடமாக இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.