சென்னை,
கொரோனா என்ற புதிய வகை நோய்க் கிருமியினால் சீனாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 304 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த நோய்க் கிருமியின் தாக்குதலுக்கு ஒருவர் பலியாகி இருக்கிறார்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து இந்தியர்கள் 2 தனி விமானங்கள் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. இதேபோல் தமிழக அரசும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, விமான நிலைய அதிகாரிகள், அங்கு இருக்கும் மருத்துவ குழுவினர், மத்திய அரசு அதிகாரிகள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், கிங் ஆய்வகத்தின் இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கிறோம். இதுதவிர வேறு வகையில் வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப் படாது. இதுவரை 5,543 பயணிகளை சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 விமான நிலையங்களில் பரிசோதனை (‘தெர்மல் ஸ்கிரீனிங்’) செய்து இருக்கிறோம். அவர்கள் அனைவரும் இயல்பாக இருக்கிறார்கள்.
கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மத்திய அரசு சில நடைமுறைகளை சொல்லி இருக்கிறது. அந்தவகையில் சீனாவில் இருந்து வந்த 646 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளில் இருந்து வந்த 153 பேர் என மொத்தம் 799 பேர் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்களுடைய அன்றாட பணிகளை செய்கிறார்கள். ஆனால் அவர்களின் செல்போன் எண், முகவரியை வைத்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, இருமல், தொண்டை வலி, தலை சுற்றல் இருக்கிறதா? என கேட்டு வருகிறார்கள்.
அவர்கள் அனைவரும் தற்போது வரை இயல்பாகவே இருக்கிறார்கள். யாருக்கும் பாதிப்பு இல்லை. சீனாவின் உகான் நகரில் இருந்து வருபவர்களை எப்படி கண்காணிக்க வேண்டும்? கேரளாவில் ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவருடன் பயணித்தவர்களை எப்படி கண்காணிக்க வேண்டும்? என்பது பற்றி மத்திய அரசு சொல்லி இருக்கிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 10 பேர் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை.
இதேபோல், திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் தலா ஒரு பயணி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் எந்த அறிகுறியும் இல்லை. இந்த 12 பேரும் நலமுடன் இருக்கிறார் கள். சீனாவில் இருந்து வந்ததால் அவர்களை மருத்துவமனையில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பது குறித்து எடுக்கப்படும் பரிசோதனை முடிவு 48 மணி நேரத்தில் வெளியிடப்படும்.
1,642 டாக்டர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. இதுவரை சென்னை கிங் ஆய்வகத்துக்கு 5 மாதிரிகளும், புனே ஆய்வகத்துக்கு 4 மாதிரிகளும் அனுப்பப்பட்டு இருக்கின்றன.
தற்போது நம்மிடம் 55 ஆயிரத்து 715 மூன்றடுக்கு முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளன. இதுதவிர மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கிறது. சென்னை கிங் ஆய்வகத்தில், கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதனை அறிய ஒரு நாளைக்கு 60 பரிசோதனைகள் செய்ய முடியும். அங்கு 24 மணி நேரமும் பணியாளர்கள் இருப்பார்கள். எந்த கால தாமதமும் இன்றி பரிசோதனை முடிவுகளை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். யாரும் பயப்பட வேண்டாம், அதேநேரத்தில் அலட்சியமும் காட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.