வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்பக் கழகத்தின் துணைத் தலைவராக இருந்த நா. வையாபுரி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவியில் பிமல் குமார் ஜா, பொறுப்பேற்றுக் கொண்டார்.
2012 முதல் 2019 வரை ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் மற்றும் தீனதயாள் (கான்ட்லா) துறைமுகங்களில் செயலராக இவர் பணியாற்றியுள்ளார். மேலும், தீனதயாள் (கான்ட்லா) துறைமுகத்தின் துணைத் தலைவராக கூடுதல் பொறுப்பில் 24.07.2018 முதல் 16.04.2019 வரை பணியாற்றியுள்ளார்.
பிமல் குமார் ஜா, கொல்கத்தா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட புனித சவேரியார் கல்லூரியில் கணிதத் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மேலும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணியாளர்கள் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற வணிக மேலாண்மை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். மேலும் மனிதவள மேலாண்மை, தொழில் தொடர்பு மற்றும் தொழிலாளர் நலன் ஆகிய பிரிவுகளில் பல்கலைக் கழக மானியக் குழுவின் மனிதவள மேலாண்மைத் துறையிலும் தகுதி பெற்றவர். பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் / ஃப்ளாண்டர்ஸ் துறைமுக பயிற்சி மையத்தில் துறைமுக நிர்வாகத் துறையில் பயிற்சி பெற்றுள்ளார்.
1994 ஆம் ஆண்டு இந்திய பெருந்துறைமுக துறையில் தனது பணியைத் துவக்கிய இவர், 2001 முதல் 2012 வரை கொச்சி துறைமுகத்தில் பல்வேறு துறையின்கீழ் பணியாற்றியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு மேல் துறைமுகம் மற்றும் கப்பல் துறையில் பணியாற்றிய இவர், துறைமுக செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர் ஆவார். மேலும் இவர் மனித வள மேலாண்மை, தொழில் தொடர்பு, பயிற்சி மற்றும் கல்வி, மக்கள் தொடர்பு மற்றும் பெருநிறுவன தொடர்பு, தொழிலாளர் நலன், சட்டம் மற்றும் நிதி விவகாரங்களில் நிபுணத்துவமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய தகவலை வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.