மதுரை அருகே, தனது நண்பருக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க ரவுடியின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டார்.
அலங்காநல்லூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேலு (31). இவர் பன்றி இறைச்சி வியாபாரம் செய்துவந்துள்ளார். இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எப்போதும் மது, நண்பர்கள் என இருக்கும் முத்துவேலுவின் வட்டாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் இணைந்துள்ளார்.
நாகராஜன் - முத்துவேலு நட்பு நன்றாகவே சென்று கொண்டிருந்த நிலையில் நாகராஜனின் மற்றொரு நண்பர் முத்துக்குமாரின் உறவுக்கார பெண் ஒருவரை முத்துவேலு கடத்தி 4 நாட்கள் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. முத்துவேலு மீது நாகராஜனும் முத்துக்குமாரும் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். நண்பருக்காக முத்துவேலுவைக் கொலை செய்யத் துணிந்துள்ளார் நாகராஜன்.
இதற்காகத் திட்டமிட்டு நேற்று மாலை அலங்காநல்லூர் காவலர் தெருவில் உள்ள ஓர் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். முத்துவேலுவை அதிகமாகக் குடிக்க வைத்த நிலையில் அவரின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளார்.