கோவில் குளங்களில் பக்தர்கள் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி,சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் திருக்குளங்களின் அனைத்து வாயில்களையும் பூட்டி வைக்கவும், குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கவும், பக்தர்கள் குளத்தின் அருகில் செல்லாதவாறு கோவில் பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறும், படிக்கட்டுகளை தாண்டி பக்தர்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதே போல,குளங்களின் படிக்கட்டுகளை பாதுகாப்பாகவும்,பாசிகள் தேங்காமல் தூய்மையாக பராமரிக்குமாறும், பாதுகாப்பற்ற பகுதி குறித்த எச்சரிக்கை பலகை வைக்க அறிவுறுத்த பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெப்பத் திருவிழாவின் போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினை பணியமர்த்துமாறும், நீச்சல் வீரர்களை திருக்குளத்தின் அருகே உதவிக்காக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவில் குளங்களில் பக்தர்கள் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை! தமிழக அரசை பதில் மனு தாக்கல்!