மகாரத்னா தொழில்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு மகுடத்தில் மேலும் ஒரு வைரத்தைப் பதித்துள்ளது. மின்சார பேட்டரியால் இயங்கும் வாகன தொடக்கவிழா இந்நிறுவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்றது. நாட்டிலேயே முதலாவது வகையிலான புதிய தனித்துவம் கொண்ட இந்த வாகன வெள்ளோட்டத்தை சென்னையில் உள்ள பிபிசிஎல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி ராஜ்குமார் தொடங்கிவைத்தார். பேராசிரியர் ஜுன்ஜுன்வாலா (ஐஐடி, சென்னை), சுலஜ்ஜா ஃபிரோடியா (நிர்வாக இயக்குனர் கைனட்டிக் க்ரீன்) ஆகியோர் உடனிருந்தனர்.
மின்சார வாகன முன்முயற்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய டி ராஜ்குமார், காற்றுமாசு அதிகரித்துவரும் நிலையில் நகரமயம் விரைவடைந்து வரும் நிலையில் மின்சார வாகனம் இந்தியாவின் எதிர்காலப் போக்குவரத்து சாதனமாக இருக்கும் என்றார். வரும் ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் பங்கு நகரப்போக்குவரத்தில் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இருப்பினும் இதற்கான சவால்களும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்முயற்சியின் தொழில்நுட்ப உதவிக்கு சென்னை ஐஐடி, வாகன பங்குதாரராக கைனட்டிக் க்ரீன் நிறுவனம் ஆகியவை வலுவான கூட்டாளிகளோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.
தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள (மூன்று சக்கர) வாகனம் கைனட்டிக் க்ரீன் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும். இது செலவு குறைந்த தூய்மையான, சிக்கல் இல்லாத வாகனமாகும். இதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம். பேட்டரியை மின்னேற்றம் செய்வதற்கு பதிலாக மாற்றியமைக்கும் வசதி இருப்பதால், நீண்டநேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
பிபிசிஎல் நிறுவனத்திற்கு ஏராளமான விற்பனை நிலையங்கள் இருப்பதால், அருகில் உள்ள நிலையத்தில் மின்சாரம் தீர்ந்த பேட்டரிகளுக்கு பதிலாக மின்னேற்றம் செய்யப்பட்ட பேட்டரிகளை ஓட்டுநர்கள் மாற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம் மின்சார வாகனங்களுக்கு இருந்த முக்கியமான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார வாகனத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு முழுவதும் சென்னை ஐஐடி மூலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் பேட்டரி, சார்ஜர், வாகனம், அறிவியல் தொழில்நுட்பக் கட்டமைப்பு இந்த முன்முயற்சிக்குத் தேவையான சாதனங்களை இறுதி செய்தல் ஆகியவற்றில் ஐஐடி உதவி செய்துள்ளது.
மூன்று சக்கர வாகனம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வலுவான கைனட்டிக் க்ரீன் எனர்ஜி மற்றும் பவர் சொலுஷன்ஸ் நிறுவனம் மூன்று சக்கர மோட்டார் வாகன சந்தையில் பெரும் பங்கு வகிக்கிறது. உற்பத்தித் தரம், பாதுகாப்பு, பயன்பாட்டாளர் அனுபவம், ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றிலும் இந்நிறுவனம் உயர்ந்த நிலையில் உள்ளது. இ ரிக்ஷாக்களை / இ ஆட்டோக்களை லக்னோ, நாக்பூர், கொச்சி ஆகிய பெருநகரங்களில் இயக்க கைனட்டிக் க்ரீன் ஏற்கனவே உரிமங்களைப் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள பிபிசிஎல் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவு துணைப் பொதுமேலாளர் எஸ் எஸ் சுந்தரராஜன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.