இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்குத் தனி மவுசு உள்ளது. இதற்குக் காரணம் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் எல்லை பிரச்சனைகளை கிரிக்கெட்டில் திணிப்பதால் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்கள் உலகளவில் சிறப்பு வாய்ந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் 7 ஆண்டுகளாக இருதரப்பு தொடரில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகின்றன. எனினும் உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடியிடம் இணையதள செய்தி நிறுவனம்,”இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும்” எனக் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்த அப்ரிடி,”மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இருநாட்டு கிரிக்கெட் தொடர் குறித்து இந்தியாவிடம் சாதகமான பதில் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மோடி சிந்திப்பதை அனைவரும் அறிந்துள்ளோம். அவரது சிந்தனை பெரும்பாலும் எதிர்மறை விஷயங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஒரே ஒரு நபரால் (மோடி) இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சிதைக்கப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள இந்திய மக்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவிற்கும் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால் இதுகுறித்து மோடி என்ன விரும்புகிறார் அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”என இந்தியப் பிரதமர் மோடியை கடுமையாகச் சாடினார்.