திரைப்படத் துறையில் சர்வதேச நாடுகளுடன் கூட்டுத் தயாரிப்புக்கும், ஒத்துழைப்புக்குமான வாய்ப்புகளை இந்தியா கண்டறிந்துள்ளது!


மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (திரைப்படங்கள்)  டி.சி.ஏ. கல்யாணி, திரைப்பட விழாக்கள் இயக்குனரகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர்  சைதன்ய பிரசாத் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவின் உறுப்பினர்கள் ஐரோப்பிய திரைப்பட சந்தை(இஎஃப்எம்)யின் பிரதிநிதிகளை சந்தித்தனர். இந்தத் தூதுக்குழுவினரும், இஎஃப்எம் பிரதிநிதிகளும் முக்கியத்துவம் வாய்ந்த 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) குறித்து விரிவாக விவாதித்தனர். ‘திரைப்படம் எடுப்பதை எளிதாக்குவதை’ உறுதிப்படுத்த ஒற்றைச்சாளர முறையிலான  திரைப்படத் தயாரிப்பு உதவி அலுவலகம், இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க www.offo.gov.in என்ற இணையப்பக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் அண்மைக்கால கொள்கை முன்முயற்சிகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.


     பின்னர், இந்தியக் குழுவினர் ஐரோப்பிய திரைப்பட சந்தையின் இயக்குனர் திரு. மத்தீஜீஸ் வூட்டர் நால்-ஐ சந்தித்தனர். இஎஃப்எம் அமைப்பில் இருப்பவர்கள் 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்கள் என நால் கூறினார்.


     இந்திய சர்வதேச திரைப்பட விழா 2020-ல் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்து ரெயின்டன்ஸ் மற்றும் எடின்பர்க் திரைப்பட விழாக்களின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். இந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாக்களில் இணைந்து பணியாற்றுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்திய சர்வதேச திரைப்பட விழா 2020-ல் பங்கேற்கவும், ஆதரிக்கவும் மிஃபா அமைப்பின் தலைவர் திருமதி என்க்ரெனாஸ் விருப்பம் தெரிவித்தார். க்ரியேடிவ் யூரோப் மீடியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள், இந்தியாவுடன் பணியாற்றுவதில் ஆர்வம் தெரிவித்தனர்.  இந்தியா – ஐரோப்பிய கூட்டுத் தயாரிப்பு உடன்பாடுகள் ஊக்குவிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதித்தனர்.


     ஜெர்மனியின் பெர்லின் நகரில் தற்போது நடைபெற்றுவரும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழா 2020-ல் இந்தியத் தொழில்கள் கூட்டமைப்புடன் இணைந்து தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பங்கேற்றுள்ளது. வெளிநாடுகளில் இந்திய சினிமா சந்தையை பிரபலப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளுக்கு உதவி செய்யவும் இந்தத் திரைப்பட விழாவில் இந்திய அரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.