நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நீர் பற்றாக்குறை அதிகம் நிலவும் 100 மாவட்டங்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டத்தில், தமிழக மாவட்டங்களையும் சேர்க்க வேண்டுமென கோரியுள்ளார்.
தொல்லியல் சார்ந்த இடமான ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து மேம்பாட்டு பணிகள் செய்யும் அறிவிப்பிற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர், கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கக் கோரியுள்ளார்.
மின்னணு சாதனங்கள் மற்றும் திறன்பேசி தொழிற்சாலைகள் அமைக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சென்னை, திருப்பூர், விருதுநகரில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச தரம் பெறும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
தனிநபர் வருமான வரி முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளித்து, பொருள் நுகர்வை உயர்த்தும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய தொழில்நுட்பம் தொடர்பான உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அமையும் 5 புதிய திறன் மிகு நகரங்களில், தமிழகத்திலும் ஒரு திறன்மிகு நகரை அமைக்க வேண்டுமென கோரியுள்ளார்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய 100 விமான நிலையங்களில், நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரத்தில் விமான நிலையங்கள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலை விரைவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.