உலகம் முழுவதும் 100-க்கும் அதிகமான நாடுகளில் கொவிட்-19 நோய்த் தொற்று பரவியுள்ளது. இந்த நாடுகளுக்குப் பயணம் செய்தோர் அல்லது அவற்றில் தங்கியிருக்கும் போது கொவிட்-19 பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது விமான நிலையங்களில் மாறிச் சென்றவர்களுக்கு கொவிட்-19 பரவ வாய்ப்பு உள்ளது. இந்த நாடுகளில், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று ஏற்பட்டும், மரணங்கள் ஏற்பட்டுமுள்ள சில நாடுகள் நோய்த் தொற்று அபாயம் அதிகம் உள்ளவையாகும்.
பயண அறிவுரையோடு கீழ்க்கண்டவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்தியாவிற்கு வரும் சர்வதேசப் பயணிகள் அனைவரும் தங்களின் ஆரோக்கியத்தைத் தாங்களாகவே கண்காணித்துக் கொள்ள வேண்டும். செய்யத் தக்கவை, தகாதவை என அரசால் வெளியிடப்பட்டுள்ளவற்றைப் பின்பற்ற வேண்டும்.
- சீனா, ஹாங்காங், கொரியா குடியரசு, ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான். மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயணம் செய்து இந்தியாவிற்குத் திரும்பும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்களுக்குத் தாங்களாகவே தனிமைக் கண்காணிப்புக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பயணிகள் சில அமைப்புகளில் அல்லது நிறுவனங்களில் பணிபுரிபவராக இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்தக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்ற அந்த ஊழியர்களுக்கு வசதி செய்து தர வேண்டும்.
- விசா கட்டுப்பாடு தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவுரைகளுடன் கூடுதலாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 11.03.2020 அன்று அல்லது அதற்கு முன்னதாக இ-விசா உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்பட்டு அவர்கள் இதுவரை இந்தியாவிற்கு வரவில்லையென்றால் அவை ரத்து செய்யப்படுகின்றன.
- இந்த நாடுகளில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு 1.2.2020 அன்று அல்லது அதற்கு பின் விசாக்கள் (இ-விசா உட்பட) வழங்கப்பட்டு இன்னமும் இந்தியாவிற்குள் வராத அனைத்து வெளிநாட்டினரின் விசாக்களும் ரத்து செய்யப்படுகின்றன.
- ஏற்கனவே இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்கள் செல்லுபடியாகும். அவர்களின் விசா நீடிப்பு / மாறுதலுக்கு அல்லது தூதரக சேவைக்கு அருகில் உள்ள எஃப்ஆர்ஆர்ஓ / எஃப்ஆர்ஓ அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இது சம்பந்தமாக விரிவான அறிவிக்கை குடிபெயர்வு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.