கமல்ஹாசனிடம் மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் 3 மணிநேரம் விசாரணை!


இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலியான விபத்து தொடர்பாக, அப்படத்தின் கதாநாயகனான கமல்ஹாசனிடம் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் காலை 10.20 மணிக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜரானார்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, கமலிடம் விசாரணை நடத்தினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள், விபத்து எவ்வாறு நடந்தது? என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. 3 மணிநேரம் நடந்த விசாரணை முடிந்து, செய்தியாளர்களை சந்தித்த கமல் கூறுகையில், இந்த விபத்து தொடர்பாக நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்கள் அறிய காவல்துறை என்னை அழைத்திருந்தனர். நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன். அதனால், நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது கடமை. விபத்தில் உயிரிழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன்.


அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன். எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன். இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். இது தொடர்பாக, திரைத்துறை சார்ந்தவர்களை விரைவில் சந்தித்து பேசவுள்ளோம், என்றார்.