மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை நீரேற்று மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு அனுப்பும் வரலாற்று சிறப்புமிக்க நீர் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 4238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்படுவதாவது:
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் ரூ.565 கோடி மதிப்பீட்டில் நீர் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்கு 4-ம் தேதி (நாளை) காலை 10 மணியளவில் எடப்பாடி வட்டம், இருப்பாளி ஊராட்சி, மேட்டுப்பட்டி ஏரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார். மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் மழைக்கால வெள்ள உபரிநீர் வறட்சியான பகுதிகளான நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளிலுள்ள ஏரிகளுக்கு திருப்பிவிட பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
மேற்கண்ட பகுதிகளிலுள்ள ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் முழு நீர் மட்ட அளவை விட உயரமான பகுதியில் அமைந்துள்ளதால், மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு கால்வாய் அமைத்து நீர் வழங்க இயலாது. எனவே, நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் வழங்க இயலும்.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 40 பஞ்சாயத்துகளிலுள்ள 100 ஏரிகளில் நீர் நிரப்பப்படுவதன் மூலம் 4238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், பல்வேறு துறைகள் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாப் பேருரையாற்றுவார்.
இவ்விழாவில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், ஆயக்கட்டு பாசனதார விவசாய சங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார்கள். பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர், டாக்டர் க.மணிவாசன் வரவேற்புரையாற்றுவார். சேலம் மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன் நன்றியுரையாற்றுவார்.