ஆவின் நிறுவனத்தில் மேல் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் துணை மேலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் புகழேந்தி (35). இவர், மதுரை ஆவின் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணிபுரிந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி சிவகங்கை மாவட்டத்திலுள்ள புளுதிப்பட்டி அரசு பள்ளி ஒன்றில் டீச்சராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 3 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆவின் அலுவலகத்தில் நெய், பால் கொள்முதல் பிரிவில் நடந்த சில தவறு காரணமாக புகழேந்தி மீது ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தான் காரணமின்றி மேலதிகாரிகளால் பழி வாங்கப்பட்டேன் என, அவர் மனைவி, உறவினர்களிடம் கூறி வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த புகழேந்தி மன விரக்தியில் தற்கொலை செய்தார். தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருகிறது.
ஆவின் அதிகாரிகளின் துன்புறுத்தல், பழி வாங்கும் நடவடிக்கையாலே புகழேந்தி தற்கொலை செய்து கொண்டார் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகழேந்தி குடும்பத்தினர், உறவினர்கள் பனகல் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதிச்சியம் போலீஸார் சமரசம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.