இந்தியாவில் உலகப் பிரசித்திபெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சி!


உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிறது, கொரோனா வைரஸ். இதன் தாக்கம் தற்போது இந்தியாவையும் பெரிதும் பாதித்து வருகிறது.


 இந்தியாவில் கோயிலிலும் திருவிழாக்களிலும் மக்கள் திரள் நிறைந்திருக்கும். மாசி மாதம், ஹோலிப் பண்டிகை என ஆன்மிக உற்சவங்களும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ள இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தியாவிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன


கேரளா


கேரளாவில் மாதாந்திர மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஆனால், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் ஐயப்ப தரிசனம் செய்ய மலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது மக்கள் வருவதைத் தவிர்க்க முடியாது என்பதால், முடிந்தவரை நோய் பரவாமல் தடுக்க மருத்துவ, சுகாதார வசதிகள் செய்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம் நோய் அறிகுறி தென்பட்டால் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவும், சாதாரணக் காய்ச்சல் இருந்தால்கூட பொது இடங்களைத் தவிர்த்து அவர்களின் வீட்டு வாசலிலேயே பொங்கல் வைத்துக்கொள்ளவும் சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


திருப்பதி


திருப்பதி திருமலைக் கோயிலில் கொரோனாவைத் தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமலையில் பக்தர்கள் எவருக்கேனும் நோய் அறிகுறிகளான காய்ச்சல், சளி ஆகியவை ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடனடி பரிசோதனை செய்ய நவீன மருத்துவக் கருவிகளுடன் மருத்துவக் குழுக்கள் இயங்கி வருகின்றன. அறிகுறி தென்படுகிற பக்தர்கள் திருப்பதியிலுள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வருகிற பக்தர்கள் முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்துவர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, நோயின் அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி திருமலைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தங்களது ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்கள் மூலமாகவும், திருமலை ஊழியர்கள் மூலமாகவும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


ராமேஸ்வரம்


ராமேஸ்வரத்துக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டவர்களையும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படுகிறது