தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில், காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் மூவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 12-ம் தேதி தர்மசாலாவில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 15-ம் தேதி லக்னோவிலும், 3-வது போட்டி 18-ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை புதிய தேர்வு குழு தலைவர் சுனில் ஜோஷி நேற்று அறிவித்தார். இதில், முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணிக்கு திரும்யியுள்ளார். மும்பையில் நடந்த உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உடல்தகுதியை நிரூபித்த அவர் தற்போது, மீண்டும் அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் தோல்பட்டை காயத்தால் அவதிப்பட்ட தொடக்க ஆட்டகாரர் ஷிகர் தவான், குடலிறக்க பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோரும் உடல்தகுதியை எட்டி விட்டதால் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.