22 இலட்சம் டன் நெல்லை இந்தப் பருவத்தில் தமிழ்நாடு கொள்முதல் செய்ததாக கூறுகிறார், மாநில உணவு அமைச்சர் காமராஜ். கொவிட்-19 பொது முடக்கத்துக்கு இடையிலும் 6 இலட்சம் டன் நெல்லை அடுத்த பருவத்துக்கு முன்பாக தமிழ்நாடு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த விளைச்சலை அளிக்கும் பயிர்களின் மூலம், அனைவருக்கும் உணவை உறுதி செய்ய அரும்பாடு படும் நமது விவசாயிகளை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது. ஆனால், கொவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், தங்கள் வேளாண் பொருள்களை எங்கும் எடுத்துச் செல்ல முடியாமலும், விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமலும் விவசாயிகள் பெரும் சவாலை எதிர் கொண்டனர். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமையின் கீழ் சுகாதாரத் துறை, வேளாண் துறை மற்றும் பல அமைச்சகங்கள், அனைத்துத் தரப்பு மக்களின் துன்பங்களைக் களைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம், பெரும் தொற்றையும், பொது முடக்கத்தின் பாதிப்புகளையும் குறைக்க இந்தியா போராடி வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் மிகவும் தேவைப்படும் இடையீடுகளுடன் விவசாயிகளைச் சென்றடைய, மாநில அரசின் டிஜிட்டல் முயற்சியான உழவன் செயலி உதவிகரமாக இருக்கிறது.
விவசாயம் சார்ந்த பல்வேறு தகவல்களையும் மற்றும் தொடர்புடைய இதர சேவைகளையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் 2018 ஆம் ஆண்டு உழவன் செயலி தொடங்கி வைக்கப்பட்டது.
பிரதமரின் விவசாய வெகுமதி நிதி, சொட்டுநீர்ப் பாசனம், விதைகள், இயந்திரங்கள், சூரிய ஒளி நீர் இறைப்பான், நிழல் வலை, பசுமைக் குடில் விவசாயத்துக்கான குடில், பறவைகளைத் தடுக்கும் வலை, நெகிழித் தழைக் கூளம், தேன்கூடு உயர் தொழில்நுட்பம் மற்றும் சிறு தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மானியங்களைப் பற்றிய விவரங்களைத் தேர்ந்தெடுத்து தெரிந்துகொள்ளும் வசதி உழவன் செயலியில் உள்ளதாக திருச்சியை சேர்ந்த வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகிறார். பலன்களைப் பெறுவதற்கு பதிவு செய்யும் ஒரு பிரிவும் இருப்பதால், தங்கள் தகவல்களை விவசாயிகள் அதில் பதிவு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணத் தொகை மற்றும் கிராமத்திலுள்ள பட்டியலிடப்பட்ட பயிர்களின் விவரங்களை பயிர்க் காப்பீடு பகுதியில் இருந்து நாம் பெற முடியும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் வணிக சேவை வங்கிகள் அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உர இருப்பு பற்றிய தகவல், விதைகள் இருப்பு நிலவரம், பணியமர்த்தல் மையங்கள், வானிலை முன்னறிவிப்பு, வேளாண் கையேடு ஆகியவை பற்றிய விவரங்களும் விவசாயிகளின் நன்மைக்காக இந்தச் செயலியில் கிடைக்கின்றன. நெல், ராகி, சோளம், திணை, கம்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு, பருத்தி, இஞ்சி, முட்டைகோஸ் மற்றும் காளிபிளவர் ஆகியவற்றின் விலைகள், திருச்சி, தஞ்சாவூர், புதுக்க்கோடை, கரூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய முக்கிய மாவட்டங்களில் எவ்வளவு என்பதைப் பற்றி சந்தை விலைகள் பகுதியில் விவசாயிகள் தெரிந்துக் கொள்ளலாம். இயற்கை விவசாயம் பகுதியின் மூலம், நெல், ராகி, சோளம், திணை மற்றும் இதர உணவு தானியங்களின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோரை விவசாயிகள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு காவிரி நீர் தான் உயிர் மூச்சாகும். தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர், வைகை, பெரியாறு மற்றும் பவானி சாகர், கர்நாடகாவில் உள்ள கே ஆர் எஸ், கபினி மற்றும் ஹேமாவாதி உள்ளிட்ட 19 அணைகளின் தண்ணீர் அளவு, அணை அளவுகள் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம் தொடர்பான சமீபத்திய செய்திகள் வேளாண் செய்திகள் பிரிவில் வழங்கப்படுகிறது.
வேளாண் பொருள்களை வாங்க, விற்க வசதியளிக்கும் பிரிவுகள் உழவன் மின் சந்தைப் பகுதியில் உள்ளன. தக்காளி, உருளைக் கிழங்கு, சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், கத்திரிக்காய், முருங்கைக்காய், தேங்காய், பீன்ஸ், கேரட், மாங்காய் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் மாவட்ட அளவிலான உழவர் சந்தை விலைகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6,91,922 நபர்கள் இந்த செயலியில் தங்களைப் பதிவு செய்திருப்பதாக மாநில வேளாண் துறை கூறுகிறது. திருச்சியில் 19,499 பேரும், தஞ்சாவூரில் 38,468 பேரும் உழவன் செயலியில் தங்களைப் பதிவு செய்துக்கொண்டுள்ளனர். உரங்கள் மற்றும் உணவுப் பயிர்களைப் பற்றிய விவரங்கள் கிடைப்பதால் உழவன் செயலி மிகவும் உதவிகரமாக இருப்பதாக திருச்சி தப்பை கிராமத்தை சேர்ந்த விவசாயியான நடராஜன் கூறுகிறார். உழவன் செயலி மிகவும் உதவிகரமாக இருப்பதாக திருச்சி குமுளூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்னும் விவசாயியும் கூறுகிறார். உரங்கள், பயிர்கள், நீர் அளவு, மானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் ஆகியவை பற்றிய பயனுள்ள தகவல்களை விவசாயிகள் இதன் மூலம் பெறுவதாக அவர் தெரிவிக்கிறார். விலைகள், அரசுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள இயல்வதால் உழவன் செயலி மிகவும் உதவியாக இருப்பதாக திருச்சி லால்குடி ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராமச்சந்திரன் கூறுகிறார். இயற்கை விவசாயிகளுடன் தங்களால் உரையாட முடிவதால் பாரம்பரியத்தில் நாட்டமுடைய விவசாயிகளும் இதை மிகவும் விரும்புகின்றனர். பிரதமரின் விவசாயிகள் வெகுமதி நிதி மற்றும் மத்திய அரசின் இதரத் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள இயல்வதால் இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக புஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ரமேஷ் கூறுகிறார்.
உழவன் செயலி போன்ற டிஜிட்டல் தொடர்பு முயற்சிகள் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண் தொடர்பான தகவல்கள் குறித்தும் உடனடி விழிப்புணர்வை உருவாக்குவது அனைவரின் கடைமையாகும். நல்ல மகசூலை எடுப்பதற்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு உணவளிப்பதற்கும் தன்னலமில்லாமல் அரும்பாடு படும் விவசாயிகளுக்கு இது உதவும்.