மகனைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த WWE வீரர் ஷாட் காஸ்பார்ட்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடற்கரைகள் மூடப்பட்டு இருந்தன.இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு சில கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதில் ஒரு கடற்கரை தான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் வெனிஸ் கடற்கரை. இந்த கடற்கரைக்கு, பிரபல WWE வீரர் ஷாட் காஸ்பார்ட் தன்னுடைய 10 வயது மகனுடன் நீச்சலடிக்க சென்றுள்ளார்.


 


 

அப்போது எதிர்பாரதவிதமாக கடல் அலைகள் ஆக்ரோஷமாக சுமார் 6 அடிக்கும் மேல்  எழுந்தன.இதனால் இந்த அலையில் சிக்கிய ஷாட் காஸ்பார்ட் மற்றும் அவரது மகன் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்ட அங்கிருந்த கடற்கரை பாதுகாவலர்கள், அவர்களை காப்பாற்றுவதற்கு போராடினர்.

 

இதையடுத்து இருவரையும் கரைக்கு இழுத்துச் செல்லும் முயற்சியில் அவர்கள் இறங்கினர். ஷாட் காஸ்பார்ட்   6 அடி ஏழு அங்குல உயரம் மற்றும் அதிக எடை கொண்ட உடலைக் கொண்டவராக இருந்ததால், அவரை எளிதாக கையாள முடியவில்லை.

 

கடலில் மிதக்கும் குடுவைகளை போட்டு, அதை பிடித்துக் கொண்டு முன்னேறுமாறு காப்பாற்ற வந்த லைப்கார்டு ஒருவர் கூறி உள்ளார். ஆனால், அலைகள் கடுமையாக இருந்ததால் அவருடைய 10 வயது மகனால் அதை பிடிக்க முடியவில்லை.

 

இந்நிலையில், ஷாட் காஸ்பார்ட் முதலில் தன்னுடைய மகனை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் ஷாட் காஸ்பார்டை விட்டுவிட்டு, அவருடைய மகனைக் காப்பாற்றிவிட்டு, அதன் பின் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.ஆனால் அவரை அலைகள் அடித்து சென்றுவிட்டதால், அவர்களால் அவர் எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.

 

சுமார் 16.5 மணி நேரம் அவரை மீட்க தேடுதல் பணி நடைபெற்றது. எனினும், அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேடுதல் நடவடிக்கையை நிறுத்தினர்.இதையடுத்து நேற்று, காலையில் அவரது உயிரற்ற உடல் கரையில் ஒதுங்கியது.தன் மகனைக் காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த  ஷாட் காஸ்பார்ட் பற்றிய செய்தி அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.