எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - இந்திய ராணுவத்தலைவர்!



 

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன.




 

இதைத்தொடர்ந்து, 10 ந்தேதி  இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.




 

இந்த நிலையில் இரு நாட்டு முக்கிய தளபதிகளுக்கு இடையிலான ஐந்தாவது சுற்று சந்திப்பு இராணுவ பிரதிநிதிகள் இடையே நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  காலாட்படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் அபிஜித் பாபாத்துக்கும் அவரது சீனப் பிரதிநிதிக்கும் இடையே வெள்ளிக்கிழமை சந்திப்பு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நடைபெற்றது

 

இந்த நிலையில் இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே அளித்த பேட்டியில், சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில்  நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.சீன தரப்புடன் தொடர்ச்சியான உயர் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் மூலம், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படும்  என்று நம்புவதாக கூறினார்.