மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் 4 பேர் பெண்கள், மற்றவர்கள் ஆண்கள். இவர்களுக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து சுகாதாரத்துறையினர், அவர்களுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 16 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட 16 பேரில் நெடுஞ்சாலை துறை அதிகாரியும், மாநகராட்சி ஊழியரும் அடங்குவர். நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,237 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 449 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவில்லை. 127 பேர் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 6 தனிமைப்படுத்தும் முகாம்களில் 227 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று 5 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214-ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166-ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177-ஆக உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சென்னையில் இருந்து வருபவர்கள் மூலம் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.